×

திரைப்படத்திற்காக கடன் வாங்கிய விவகாரம்: சிவாஜியின் பேரன் துஷ்யந்த் பதில் தர ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: ஜகஜால கில்லாடி படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய 4 கோடி ரூபாயை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், பேரன் துஷ்யந்த் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணுவிஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோரின் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்கிற படத்தை தயாரிப்பதற்கு கடன் வழங்கக் கோரி தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்கிற நிறுவனத்தை அணுகினர்.

தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடமிருந்து பல்வேறு தவணைகளில் 4 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில், 30 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும்,  படத்தின் அனைத்து உரிமைகளை வழங்க வேண்டுமென்றும், 2018 அக்டோபருக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தின்படி கடன்தொகையை துஷ்யந்த் திருப்பி தரவில்லை. இதையடுத்து, இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக  நியமிக்கக் கோரி தனபாக்கியம் எண்டபிரைசஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மனுவில், 2022 ஜூலை மாதம் வரை வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 41 லட்சத்து 41 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால் 41 லட்சத்து 85 ஆயிரம் மட்டுமே  வட்டியாக செலுத்தியுள்ளனர். நோட்டீஸ் அனுப்பியும், துஷ்யந்த் நிறுவனம் தரப்பில் உரிய பதிலளிக்கவில்லை. சிவாஜியின் மகன் ராம்குமார் மற்றும் அவரது குடும்ப நற்பெயரை மனதில் கொண்டே கடன் கொடுத்ததாக கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இந்த வழக்கு குறித்து ஈசன் பட நிறுவனம், துஷ்யந்த், அபிராமி மற்றும் ராம்குமார் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : Dushyant , Film loan case: Shivaji's grandson Dushyant gets court notice to respond
× RELATED ஹரியானா பாஜக முதல்வர் விலக துஷ்யந்த் வலியுறுத்தல்